பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பல்வேறு சிறப்புப் பூஜைகளுக்கு மத்தியில், வரும் 26- ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கான டிக்கெட் நாளை முதல், அதாவது 24 -ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்றும், காலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தைக் காண 500 ரூபாய் கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதி சீட்டும்,
மாலை 6 மணிக்கு மகா தீபத்தைக் காண 600 ரூபாய் கட்டணத்தில் 100 பேருக்கும், அதுபோல, 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 பேருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனத் திருக்கோவில் நிர்வகாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலர் சட்டவிரோதமாக கொள்ளைப்புற வழியில் ரூ2,000 முதல் ரூ.3,000 வரை டிக்கட் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
திருக்கோவில் அறிவிப்புக்கு பல இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சுவாமியை தரிசனம் செய்யக் கட்டணம் பெறக்கூடாது, அனைவரும் சுவாமியை இலவசமாகவே சரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது பக்தர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடவும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், திருவண்ணாமலையில் பரபரப்பு நிலவிவருகிறது.