ராஜஸ்தானில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ராஜஸ்தானில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே இரு முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், “நீதியும் மனிதநேயமும்தான் நமது அரசியலின் அடிப்படை. ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் இந்த இரண்டுமே இல்லை.
ஆகவே, அசோக் கெலாட் அரசும், காங்கிரஸும் அளிக்கும் உத்தரவாதங்களை பொதுமக்கள் நம்பவில்லை. காங்கிரஸ் சொல்வதற்கும் செய்வதிற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால், பா.ஜ.க. எப்போதுமே சொன்னதையே பின்பற்றுகிறது. 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததாகட்டும், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதாகட்டும், முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வருவதாகட்டும் சொன்னதை செய்தது.
எனவே, ராஜஸ்தானில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி உள்ளது. மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை பெறும் வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது” என்றார்.