ஆட்சிக்கு வருவதற்காக காங்கிரஸ் கட்சி மக்களை ஜாதி, மத மற்றும் சமூகத்தின் அடிப்படையில் பிரிப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களில் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட மாநிலங்களுக்கு இம்மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, மிசோரம் மாநிலத்துக்கு கடந்த 7-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது. அதேபோல, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும் ஒரே கட்டமாக கடந்த 17-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. மேலும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
மீதமுள்ள ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு முறையே 25 மற்றும் 30-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆகவே, இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்காக ஆங்கிலேயர்களைப் போல ஜாதி, மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது.
மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது கடும் ஆட்சேபனைக்குரிய விஷயம். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் இதை எத்தனை முறை செய்தாலும் பிரதமர் மோடிக்கே பொதுமக்கள் ஆதரவு அளிக்கின்றனர்” என்றார்.