உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் பாஸ்ர் குல்பே தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த 12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி 13வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்டு கோளாறு காரணமாக பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, செய்தியாளர்களிடம் பேசினார். இரவு நிறுத்தப்பட்ட மீட்புப்பணி தற்போது தொடர உள்ளதாக அவர் தெரிவித்தார். சுரங்கப்பாதையில் அடுத்த 5 மீட்டருக்கு எந்த தடையும் இல்லை என்றும், எனவே துளையிடும் பணி சீராக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே இன்று மாலைக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீட்புப்பணியை ஆய்வு செல்ல நேரடியாக சென்றுள்ளார். அதேபோல் உத்தரகாண்ட முதலமைச்சர் முதல்வர் தாமி மாதலியில் உள்ள தற்காலிக அலுவலக முகாமில் இருந்து கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். சுரங்கப்பாதையின் அருகே 41 ஆம்புலன்ஸ்கள், ஏர் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர கால மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.