தாய்லாந்து நாட்டில் நடந்த உலக இந்து மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கொரோனா காலத்திற்குப் பிறகு மனிதர்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். பாரதம் வழி காட்டும் என்று ஒருமனதாக நினைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ‘உலக இந்து மாநாடு 2023’ இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகையில், “உலகம் ஒரே குடும்பம். அனைவரையும் ஒரே கலாச்சாரமாக்குவோம்.
ஜடவாத மகிழ்ச்சிக்கான அனைத்து வழிகளையும் கையகப்படுத்த, மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார்கள். இதை நாமும் அனுபவித்திருக்கிறோம். இன்றைய உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2,000 ஆண்டுகளாக மகிழ்ச்சி, பேரின்பம் மற்றும் அமைதியைக் கொண்டுவர மனிதர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜடவாதம், கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் போன்ற முயற்சிகளைக் கையாண்டனர். மேலும், பல்வேறு மதங்களையும் பின்பற்றினார்கள். ஆனால், அவர்கள் பொருட்களின் செழிப்பை அனுபவித்தனரே தவிர, திருப்தியும், மகிழ்ச்சியும்,ந நிம்மதியும் கிடைக்கவில்லை.
இந்த சூழலில், கொரோனா காலத்திற்குப் பிறகு மனிதர்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். பாரதம் வழி காட்டும் என்று ஒருமனதாக நினைக்கிறார்கள். அதற்கான பாரம்பரியம் பாரதத்தில் இருக்கிறது. மேலும், இதை பாரதம் முன்னரே செய்திருக்கிறது. அதோடு, இந்த நோக்கத்திற்காகத்தான் நமது சமூகமும், நமது நாடும் உருவாகி இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உலக முஸ்லீம் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பாரதத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் தனது உரைகளில், உலகில் நல்லிணக்கம் நிலைத்திருக்க வேண்டுமானால், பாரதம் அவசியம் என்று கூறினார். இதுதான் நமது கடமை. இதற்காகத்தான் இந்து சமுதாயம் உருவானது” என்றார்.
இம்மாநாட்டில், மாதா அமிர்தானந்தமயி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, விஞ்ஞானியும் எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றுகிறார்கள்.
தவிர, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறங்காவலர் மற்றும் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஏ ஷா, பாரதத்தின் மிகப்பெரிய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களும் ஸ்கன்ரே டெக்னாலஜி நிறுவனர்களுமான விஸ்வபிரசாத் ஆல்வா, ஸ்டான்போர்ட் உள்ளிட்ட வல்லுநர்களின் பேச்சுக்களும் இடம்பெறுகின்றன.
அதேபோல, பல்கலைக்கழக பேராசிரியர் அனுராக் மைரல், நேபாள கோடீஸ்வரர் உபேந்திரா மஹதோ, பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் ஃபகர் ஷிவா கச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.