2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர் சஞ்சு சாம்சன். இருப்பினும் கடந்த 8 ஆண்டுகளில் சஞ்சு சாம்சன் ஒரு தொடரில் கூட முழுமையாக வாய்ப்பு பெற்றதில்லை.
அண்மையில் மேற்கிந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் வாய்ப்பை பெற்றாலும், தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இரசிகர்களை திசைதிருப்பவே சஞ்சு சாம்சனை பிசிசிஐ கழற்றிவிடுவதாக இரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் புறக்கணிப்பு தொடர்பாக சஞ்சு சாம்சனே பேசியுள்ளார்.
அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்போதும் எனக்கு ஆதரவு அளித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது நான் கேப்டனான பின் 2வது நபராக எனக்கு போன் செய்தவர் ரோகித் சர்மா தான். ஐபிஎல் தொடரில் எனது அறிமுகம் முதலே என்னை பாராட்டி வருகிறார்.
மும்பை அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடிக்கிறாய் என்று கிண்டல் செய்வார். எப்போது நட்புடன் பழகுபவர் ரோகித் சர்மா.
அதேபோல் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதால், என்னை பலரும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, இப்படியான இடத்தில் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்திய தேர்வு குழு தரப்பில் சஞ்சு சாம்சனை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு கொடுக்க வேண்டுமென்றால், இன்னும் கொஞ்சம் பிட்னஸில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அடுத்தடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டி20 தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.