மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மர்மநபர் ஒருவர் விமான நிலையத்தின் டெர்மினல் 2 யை தகர்க்கப்போவதாகவும், வெடிப்பைத் தடுக்க 48 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் டாலர்களை பிட்காயினில் தரவேண்டும் என்றும் Quidacasrol@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியிருந்தார்.
மேலும், “உங்கள் விமான நிலையத்திற்கு இது இறுதி எச்சரிக்கை. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிட்காயினுக்கு மாற்றப்படாவிட்டால், 48 மணி நேரத்தில் டெர்மினல் 2 யை வெடிக்கச் செய்வோம். மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும்” என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் சஹார் காவல் நிலையத்தை அணுகி, மர்மநபர் மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 385 மற்றும் 505 கீழ் அந்த மர்ம நபர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.