உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில், மீட்புப் பணி குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை கண்காணிப்பதற்காக மாட்லியில் முகாமிட்டுள்ள உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சுரங்கத்திற்கு நேரடியாக சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.
இதனிடையே மீட்பு பணி நிலவரம் குறித்த பிரதமர் கேட்டறிந்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சக்கர ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவது தொடர்பான ஒத்திகையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க 800 மிமீ விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் மூலம் சுரங்கப்பாதையில் இடிபாடுகள் வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக சென்ற NDRF வீரர் ஒருவர் சக்கர ஸ்ட்ரெச்சரில் கீழ்நோக்கி படுத்திருந்தார். குழாய்களுக்குள் போதிய இடவசதி இருந்ததால், மூச்சு விடுவதில் சிரமம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.