வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கான ஒப்புதலை திரும்பப் பெற்ற கர்நாடக அமைச்சரவையின் நடவடிக்கையை பிஜேபி மற்றும் ஜேடி(எஸ்) கடுமையாக சாடியுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெறுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
சித்தராமையா அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மாநில அரசின் இந்த முடிவு சட்டத்திற்கு எதிரானது என்றும், நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறதோ அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பர்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகா அமைச்சரவையின் இந்த முடிவு சட்டத்திற்கு புறம்பானது என்றும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கர்நாடக பாஜக மாநில தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.