உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலில் ஏழுமலையானுக்குச் சேவை செய்யவும், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும் தன்னார்வலர்களுக்கு அற்புத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யத் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்களைத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முறைப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில், ஏழுமலையான் திருக்கோவிலில் அடுத்த ஆண்டு, அதாவது 2024 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 -ம் தேதி அன்று நடைபெறும் ரதசப்தமிக்காகத் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே, ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்ய வரும் 27 -ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல், 2024 -ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க வரும் 27 -ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.
இதே நாளில், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும், www.tirumala.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.