மணல் குவாரி அதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கோவிந்தன் ஆகியோர் வீடுகளில் 2 -வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் குவாரிகளில் ஊழல், முறைகேடு தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
மேலும், மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கணக்கில் வராத ரூ.15 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றை கிலோ தங்கம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவானார்கள்.
இந்நிலையில், மணல் குவாரி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று காலை 10 மணி முதல் மணல் குவாரி அதிபர் ரத்தினத்திற்குச் சொந்தமான, திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
மணல் குவாரி அதிபர்கள், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வரவு – செலவு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.