மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத் திட்டத்தின் கீழ், 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் பாதைத் திட்டம், ரூ. 1.08 லட்சம் கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தனர்.
பங்குதாரர் முறையின்படி மத்திய அரசு 10,000 கோடியும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் தலா 5000 கோடி தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனத்திற்கு செலுத்தும். மீதமுள்ள தொகை கடனாக 0.1 சதவீத வட்டி அடிப்படையில் ஜப்பான் வழங்கும்.
புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணியை என்ஹெச்எஸ்ஆா்சிஎல் மேற்கொண்டு வருகிறது. , இந்தத் திட்டத்தின் கீழ், 100 கி.மீ.க்கு பாலங்கள், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பாா் மற்றும் ஓளரங்கா ஆறுகள், நவ்சாா் மாவட்டத்தில் உள்ள பூா்னா, மிந்தோலா, அம்பிகா மற்றும் வெங்கானியா ஆறுகள் மீது கட்டப்பட்ட பாலங்களும் அடங்கும் என்றும் என்ஹெச்எஸ்ஆா்சிஎல் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://x.com/AshwiniVaishnaw/status/1727699167869624360?s=20