நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் காட்டு யானைகள் உணவு கிடைத்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று விடும். ஒரு சில யானைகள் மட்டும் ஆக்ரோஷம் கொண்டு வீடுகளைத் தாக்குவதும், மனிதர்களைத் தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டத் தொழிற்சாலையில் 55 வயதான பிரான்சிஸ் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அவரை வழிமறித்த காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார். சாலையில் சென்றவர்கள் அவரைக் காப்பாற்றி, வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால், கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக ஆட்சி அமைந்தது முதலே, வனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை காட்டாமல் வனத்துறை உள்ளது. மேலும், வனவிலங்கு – மனித மோதல் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், வனத்துறையினர் அலட்சியம் காரணமாகவே, தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.