திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 26ஆத் தேதி நடைபெறும் நிலையில், அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வானா பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம் 7ஆம் நாளில் நடைபெற்றது. காலை 7:45 மணியளவில் விநாயகர் தேரோட்டமும், பின்னர் முருகர் தேரோட்டமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகா தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா நவம்பர் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், மூலவா் ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதேநேரத்தில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருவா்.
இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.. பாதுகாப்புப் பணியில் சுமாா் 13 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.