ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் சில சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டு விட்டன. போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், 3,500 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. முதலில் விமானப்படை மூலம் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்ட இஸ்ரேல் இராணும், தற்போது முப்படைகளையும் களமிறக்கி விட்டிருக்கிறது. இஸ்ரேலின் இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. மேலும், 14,500 பேர் உயிரிழந்திருப்பதோடு, 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட தீவிரவாத இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. ஆனாலும், பாதாள அறைகள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றுக்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்துகொண்டு, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த சுரங்கப் பாதைகள் மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்தும், ஹமாஸ் அமைப்பினர் மறுத்து வந்தனர். இதையடுத்து, காஸா நகரின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், அம்மருத்துவமனையின் அடியில் சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேலும், இதேபோல பல சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்து அழித்தது.
இதனிடையே, பிணைக் கைதிகள் விடுதலை தொடர்பாக, கத்தார் மற்றும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒப்பந்தப்படி ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை விடுவிக்க, பதிலுக்கு பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. எனினும், 4 நாள் போர் நிறுத்தத்துக்குப் பிறகு போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், தீவிரமாக சண்டையைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஹமாஸின் மேலும் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளன. இவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம்.
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் அனைத்து சுரங்கங்கள் அழிக்கப்படும். கூடுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படா விட்டால் போர் நிறுத்தம் 27-ம் தேதி காலாவதியாகும். எனினும், காஸா நகர மக்கள் வடக்குப் பகுதிக்குச் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது” என்று கூறியிருக்கிறார்.