சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு, வருகிற டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், ரூபாய் 5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, க்யூஆர் பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் வெறும் ரூபாய் 5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பிரத்தியேக கட்டணம் அன்று ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும், இது இ-க்யூஆர்பயணச்சீட்டுகளுக்கு (பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே) மட்டுமே பொருந்தும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அடித்தள தினத்தை நினைவுகூரும் வகையில் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்தியேக கட்டண சலகை வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்குப் பொருந்தாது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சென்னை மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.