திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 26ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறும் நிலையில், மகாதீபம் மற்றும் தீப கொப்பரை குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ.26) நடைபெறுகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் குறித்த சற்று விரிவாக பார்க்கலாம். திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் மகாதீபக் கொப்பரைக்கும் ஒரு வரலாறு உண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை 2668 அடி உயரம் கொண்டது. தற்போது தமிழக அரசு இதன் உயரம் 2787 அடிகள் என அறிவித்துள்ளது. இதன் உச்சியில் பிரம்மாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம். மலைமேல் மகாதீபம் என்ற பெருமை இங்கு மட்டுமே உள்ளது. பின்னர் திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் உண்டானது.
மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்தவருக்கு உரியது. மீனவர் தலைவரான பர்வதராஜன் என்பவனின் மகளாக பார்வதி தேவி பிறந்தார் . மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற பொருளில் ‘கயல் கண்ணி ‘ என்று பெயரிட்டனர். இந்த கயல் கண்ணியினைச் சிவபெருமான், மீனவ இளைஞனாக வந்து, மணந்து, தேவியின் சாபம் நீக்கி, இருவரும் சிவ பார்வதியாக பருவதராஜனுக்கு தரிசனம் தந்தனர்.
இதனால் மீனவர்களுக்குப் பருவதராஜகுலத்தார் என்று பெயர் ஏற்பட்டது.இந்த பருவதராஜகுலத்தார் தான் தலைமுறை தலைமுறையாக மகாதீபம் ஏற்றும் உரிமைகளை உடையவர்கள். தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் மாலையில் மலைமேல் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை, மலைமீது முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.
தீபத் திருவிழாவில் தீபம் ஏற்றும் கொப்பரை பற்றியும் வரலாறு உண்டு. இந்த கொப்பரையை ஆதி காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
1668 ஆம் ஆண்டு, வேங்கடபதி என்பவர் கொப்பரையை செய்து அளித்துள்ளார். கோயிலில் இது பற்றிய குறிப்பு பதிவாகி உள்ளது. இது, தொடர்ந்து நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்தது.
இதையடுத்து, தற்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு உருவானது. இது 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 92 கிலோ செம்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது. கொப்பரையில் அடிப்பாகம் 27அங்குல விட்டமும் மேற்புறம் 37 அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம் 57 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது.