குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக வின்னிங் மற்றும் இறுதிப் போட்டி வரை சென்ற ஒரு அணியின் கேப்டனை மற்றொரு அணி பேரம் பேசி விலைக்கு வாங்குவது என்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது.அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
அறிமுக சீசனிலேயே குஜராத் அணி சாம்பியனானது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் 16ஆவது சீசனில் இறுதிப் போட்டி வரை வந்தது.
குஜராத் அணியை அடுத்தடுத்து 2 முறையிலும் இறுதிப் போட்டி வரை அழைத்து வந்த சிறந்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார்.
அப்படிப்பட்ட ஒரு கேப்டனை குஜராத் அணி நிர்வாகம் எப்படி மாற்ற நினைத்ததோ? ஆனால், அவரை மாற்றுவதற்கு ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறடுது.
ஐபிஎல் விதிமுறைப்படி டிரேட் என்று சொல்லப்படும் அணிகளுக்குள் வீரரை மாற்றிக் கொள்ளும் முறை மூலமாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ரூ.15 கோடி கொடுத்து தங்களது அணிக்கு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாம்.
அதற்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து டிரேட் முறையில் எந்த வீரரையும் குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்று கொள்ளவில்லையாம்.
கடந்த ஐபிஎல் 2015க்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியால் ஹர்திக் பாண்டியா வெறும் ரூ.10 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவரது முதல் இரண்டு சீசன்கள் குறிப்பிடத்தக்கதாக இல்லை, ஆனால் ஐபிஎல் 2017ல், அப்போதைய இளம் ஆல்-ரவுண்டர் 156.2 ஸ்ட்ரைக் ரேட்டில் 250 ரன்கள் எடுத்ததன் மூலம் புகழ் பெற்றார், அதே நேரத்தில் 6 விக்கெட்டுகளையும் எடுத்தார்.
2018 ஆம் ஆண்டில் இன்னும் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, அவர் 260 ரன்கள் எடுத்தார், ஆனால் ஒரு பந்துவீச்சாளராக 18 விக்கெட்டுகளை எடுத்தார், ஹர்திக்கை மும்பை இந்தியன்ஸ் 11 கோடி ரூபாய்க்கு அதிக விலைக்கு தக்க வைத்துக் கொண்டது.
அடுத்த மூன்று சீசன்களில் சிற்ப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை 2022 ஐபிஎல்-க்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் விடுவிக்க முடிவு செய்தது. மும்பையில் தனது ஏழு சீசன்களில், ஹர்திக் 1476 ரன்கள் எடுத்தார். அதோடு 42 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
ஹர்திக் பின்னர் புதிதாக உருவான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ரூ.15 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், மேலும் அவர்களின் முதல் சீசனில் மட்டுமே டைட்டில் வென்றார். ஆனால், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் சாம்பியன்ஸ் பட்டத்தை இழந்து 2ஆவது இடம் பிடித்தது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜூன் டெண்டுல்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், டெவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கிறிஸ் ஜோர்டன், சந்தீப் வாரியர், டுவான் ஜான்சன் ஆகிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஐபிஎல் 2024 ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க உள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் தங்களது அணிகளில் உள்ள விடுவிக்கும் மற்றும் தங்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் 26ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.