சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை பி.எஸ்.எல்.வி.-சி 57 ராக்கெட் உதவியுடன், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள, ‘லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1’ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும்.
இந்தியாவில் விண்வெளி ஆய்வு துவங்கி 60 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ” ஆதித்யா எல்-1 விண்கலம் இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி எல்-1 புள்ளியை ஆதித்யா விண்கலம் சென்றடையும். ஆதித்யா விண்கலம் 125 நாட்களில் 15 லட்சம் கி.மீ பயணம் செய்துள்ளது” என்று கூறினார்.