திருவண்ணாமலை கார்த்திகை தீபத்ததை காண மலையேறும் டோக்கன் பெற பக்தர்கள் திரண்ட போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பத்து நாட்கள் சுவாமிகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தைக் காண நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.
இன்று மாலை சரியாக 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகைத் தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனுமதிச்சீட்டைப் பெற அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பதறி ஓடிய பக்தர்கள் சிலர் கல்லூரியின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்தனர். அப்போது சுவர் இடிந்த விழுந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கு இருந்த தடுப்பு வேலிகளும் உடைக்கப்பட்டன.