உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக செங்குத்து துளையிடல் பணி தொடங்கியுள்ளது.
உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 15-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் (auger drilling machine) பழுதடைந்ததால் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து சுரங்கப்பாதைக்குள் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மற்றொரு முயற்சியாக செங்குத்து துளையிடல் பணி தொடங்கியுள்ளது. மொத்தம் 86 மீட்டர் துளையிட முடிவு செய்யப்பட்ட நிலையில், ஒன்றரை மணி நேரத்தில் 15 மீட்டர் தோண்டப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் அடுத்த 2 நாட்களில் இந்த பணி நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அஹ்மத் தெரிவித்தார்.
இதனிடையே கிடைமட்டமாக துளையிடும் பணி 28ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், இந்தப் பணி நிறைவடைய 15 நாட்கள் ஆகலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கான்கிரீட் படுக்கை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக கூறினார். இதேபோல் பல்வேறு திட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் மீட்க முயற்சி நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.