பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக இன்று அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சரியாக அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது. இன்று ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்.
இதற்காக 4500 கிலோ நெய் உபயோகப்படுத்தப்பட உள்ளது. 1500 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.