சிறிய கோவிலாக இருந்தாலும், அல்லது பெரிய கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவில் முன்பு அழகிய கொடி மரம் இருக்கும்.
இந்த கொடி மரம், தண்டு சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் செய்வது வழக்கம். கொடி மரம் ராஜகோபுரத்தைவிட அதிக உயரத்தில் இருக்காது. ஆனால், கருவறை விமானத்துக்கு நிகராக அமைக்கப்பட்டிருக்கும்.
கொடி கம்பத்தின் 5 -ல் ஒரு பாகம் பூமியில் உள்ளே பதிந்து இருக்குமாறும், அதன் அடியிலிருந்து உச்சி வரை 7 பாகமாக்கி, சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர்.
பிரம்ம பாகம் எனக் கூறப்படும், அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்தும். அதன் மேல் உள்ள எண்கோணமாயிருக்கும் பாகம் விஷ்ணு பாகமாகும்.
இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிப்பதால், அது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். எனவே, கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்களின் முத்தொழில்களையும் உணர்த்துகிறது.
நமது முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளது போலவே, 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி பெருமையும், புகழும் வாய்ந்த கொடி மரத்தை தொட்டும், சுற்றி வந்தும் வணங்க வேண்டும். கொடி மரம் மூலவருக்கு நிகரானது என்பதால், கொடி மரம் அருகில் நின்று செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் மூலவரிடம் எதிரொலிக்கும். விரைவில் நிறைவேறும்.
எனவே, சுவாமி தரிசனம் செய்பவர்கள் மறக்காமல் கொடி மரத்தை வணங்கி அருள் பெறவேண்டும்.