ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, போட்டியை நேரில் காண வந்த பிரதமர் மோடி, இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்று, அங்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான விரேந்திர சேவாக், வீரர்களை ஓய்வு அறையில் நாட்டின் பிரதமரே நேரில் சென்று காண்பது அபூர்வமான விஷயம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர், “ஒரு மோசமான தோல்விக்கு பிறகு நொறுங்கிய வீரர்களின் இதயங்களையும், உற்சாகத்தையும் மேலே கொண்டு வர பிரதமரின் ஆறுதல் அவசியம்.
தனது முக்கிய பணிகளுக்கு இடையே ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் அற்புதமான நடத்தை இது.
தோல்விக்கு பிறகு அணியினர், குடும்ப உறுப்பினர்களை போன்று ஒற்றுமையுடன் ஆறுதல் கூற எவரேனும் உள்ளனரா என ஏங்கும் தருணம் அது.
இனி வரும் காலங்களில் பல நாடுகளில் பல போட்டிகளில் பங்கு பெற உள்ள நம் நாட்டு அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும்.
இப்போது நடந்தது போல், இனி வரும் போட்டிகளில் இறுதி கட்ட தடை கற்களை தாண்டவும் இது உதவும் ” என்று கூறியுள்ளார்.