தெலுங்கானாவில் ரைது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ரைது பந்து (Rythu Bandhu) திட்டத்தின் கீழ், விவசாயிக்கு ஏக்கருக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி நேரடியாக ஒவ்வொரு விவசாயியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளவரை நிதி உதவி வழங்க தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த திட்டத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் நடத்தை விதிகள் மீறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்த வடிவத்திலும் அல்லது வாக்குறுதி மூலம் நிதி மானியங்களை அறிவிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி. ஹரீஷ் ராவ், விளம்பரப்படுத்தும் நோக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு, Rythu Bandhu ஊக்கத்தொகையை வழங்க தெலுங்கானா அரசுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.