குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட சீக்கிய குருத்வாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் பிறந்தார்.
ஏப்ரல் மாதத்தில் அவர் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்காக குரு நானக் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
அதிகாலை 4 மணியளவில் சீக்கிய பக்திப் பாடல்கள், குரு கிரந்த சாகிப்பில் உள்ள அறிவுரைகள் ஆகியவற்றுடன் குருநானக் ஜெயந்தி கொண்டாடங்கள் தொடங்கின. இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இலவச உணவு பரிமாறப்பட்டது.
குருநானக் ஜெயந்தியையொட்டி சீக்கிய குருத்வாராக்கள் மலர்களாலும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் காலை முதலே சீக்கியர்கள் வழிபாட்டிற்காக குவிந்து வருகின்றனர்.
இதேபோல், இமாச்சல பிரதேசம் மண்டியில் உள்ள குருத்வாரா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்ரீ ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாரா வண்ண விளக்குகளில் ஜொலிக்கிறது.