திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் இலட்சதீபம் ஏற்றப்பட்டது.
உலகப்புகழ் பெற்றது மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இங்கு திருக்கார்த்திகை உற்சவ விழா, கடந்த 21 -ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு, திருக்கோவில் பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் உள்படத் திருக்கோவில் வளாகம் முழுவதும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று லட்சம் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றினர்.
இதனால், திருக்கோவில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, வருகிறது.