தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரும் 29ந் தேதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய புயலுக்கு மியான்மர் பரிந்துரைப்படி ‘மிக்ஜாம்’ என பெயரிடப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது