சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டேவாடாவில் உள்ள 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி, சாலைகள், வாகனங்கள் மற்றும் பணியில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை சேதப்படுத்தி வருவதை நக்சலைட்டுகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், பன்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்காலி முகாமில் அதிகாலை 1.30 மணியளவில், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான பணிகளில் ஈடுபட்டிருந்த 14 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை திடீரென தீ பற்றி எரிந்தன.
இதனால், அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய 40 முதல் 50 பேர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள், லாரிகள், பொக்லைன்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் ஆகியவற்றிக்கு தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, பன்சி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி தலைமையிலான போலீஸ் குழு மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், இது நக்சலைட்டுகளின் சதிவேலை என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை காவல்துறை திவிரப்படுத்தியுள்ளது.