இந்துக்களின் கடவுள் என போற்றப்படும் பகவான் ஸ்ரீ ராமரின் பிறந்த இடமான அயோத்தியில், பிரமாண்டமான ஸ்ரீ ராமர் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 -ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த கோவிலின் முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, கோவிலின் கருவறையில் பகவான் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போது, கருவறையின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு, அயோத்திக்கு வாருங்கள் என்று பொது மக்களை நேரில் அழைக்கும் வகையில், தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரம் வரை சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்சதையை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வீடுவீடாக நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.
அட்சதையுடன் ஸ்ரீ ராம் லீலா புகைப்படமும் வழங்கப்படுகிறது. இதனால், இந்துக்களும், பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.