பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் தனது வாழ்க்கையை சிதைத்து விட்டதாக கூறி புஷ்ரா பீபிவின் முன்னாள் கணவர் நீதிமன்றத்தில் பரபரப்பான வழக்கை தொடர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் கான் ஓய்வுக்கு பின் கட்சி தொடங்கினார். அவரது கட்சியின் பெயர் தெஹ்ரிக் இ இன்சாஃப். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் வெற்றிப் பெற்றது.
இதையடுத்து அவரது தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தது. இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு கூட்டணி கட்சியினர், ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தனது பிரதமர் பதவியை இழந்தார்.
அதன்பிறகு பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
நாடாளுமன்ற பதவிக்காலம் முடிய 2 நாட்கள் இருந்த நிலையில் அவர் நாடாளுமன்றத்தை கலைத்தார். விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே தான் இம்ரான் கான் மீதான பல ஊழல் குற்றச்சாட்டுகளின் விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. அவர் பிரதமராக இருந்தப் போது பரிசாக கிடைத்த பொருட்களை கருவூலத்தில் வழங்காமல் ஊழல் செய்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் தற்பாது இம்ரான் கான் இன்னொரு சிக்கலில் மாட்டியுள்ளார்.
அதாவது இம்ரான் கான் மீதும், அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கும் எதிராக இஸ்லாமபாத் கிழக்கு சீனியர் சிவில் நீதிபதி குத்ரத்துல்லா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்தவர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபியின் முன்னாள் கணவர் கவார் பரித் மேனகா ஆவார். இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இம்ரான் கானும், புஷ்ரா பீபியும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டனர் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” இம்ரான் கானும், புஷ்ரா பீபியும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டனர். என் திருமண வாழ்க்கையை இருவரும் சீரழித்துவிட்டனர். இவர்கள் மீது பாகிஸ்தான் தண்டனை சட்டப்பிரிவு 34, 496 மற்றும் 496 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் இந்த மனுவின் விசாரணையின் போது கவார் பரித் மேனகா எழுத்துப்பூர்வ ஆதாரத்தை தாக்கல் செய்தார்.
இதையடுத்து வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள இஸ்தேகாம்-இ-பாகிஸ்தான் கட்சி உறுப்பினர் அவ்ன் சவுத்ரி, இம்ரான்கான் -புஷ்ரா பீபியின் திருமணத்தை முன்னின்று நடத்திய முஃப்தி முகமது சயீத் மற்றும் கவார் பரித் மேனகாவின் வீட்டு பணியாளர் லத்தீப் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதோடு, வழக்கு விசாரணைக்கு நவம்பர் 28 ம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனால் இம்ரான் கானுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.