கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது.
சென்னை வெள்ளம்: கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், மழைநீரும் கலந்து அடையாறில் பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது.
சென்னையின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்கப்படும் போது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பல்வேறு நீர்நிலைகள் 75 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி வருகின்றன. நீர்வளத்துறை கீழ் இருக்கும் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கடந்த ஆண்டை காட்டிலும் மழை குறைவு என்றாலும் வங்ககடலில் உருவாகி உள்ள காற்றழுத்தம் காரணமாக சென்னையிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.97 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 3.113 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 550 கன அடியாக உள்ளது.
உபரிநீர் திறப்பு எப்போது: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 164 கன அடியாக உள்ளது.
கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. விரைவில் ஏரி நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
கடலென மாறிய ஏரிகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 41 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 58 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 5 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மழை நீடிக்கும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிகள் கடலென மாறி வருவதால் இந்த ஆண்டு சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.