கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் சன்னதியில் திருக்கார்த்திகை ஸஹஸ்ர தீபம் ஏற்றப்பட்டது.
ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவிலின் கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.
அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். இதனையொட்டி நவம்பர் 24ஆம் தேதி சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் ஓத புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இந்நிலையில் கார்த்திகை தீப திருநாளான 27ஆம் தேதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் சன்னதியில் திருக்கார்த்திகை ஸஹஸ்ர தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.