காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை மட்டுமே கனடா பகிர்ந்தது. ஆதாரங்களை தரவில்லை என்று கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியிருக்கிறார்.
கடந்த வாரம் அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்வதற்கான சதித் திட்டத்தை அமெரிக்கா கண்டறிந்ததாகவும், இச்சதித் திட்டத்தில் இந்தியா ஈடுபட்டிருப்பதாக கவலையின் காரணமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில், கனடா நாட்டின் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, “அமெரிக்கா வழங்கிய தகவல்கள் அந்நாட்டிள்ள குண்டர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் மற்றும் துப்பாக்கி விற்பவர்களுக்கு இடையேயான தொடர்பு.
மேலும் சில இந்திய தொடர்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு நான் இந்திய தொடர்புகள் என்று குறிப்பிடுவது இந்திய அரசாங்கத்தின் தொடர்புகளை இல்லை. அங்கு, 1.4 பில்லியன் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் சிலரது தொடர்புகள் உள்ளன. அவர்கள் விசாரிக்கத் தயாராக உள்ளனர்.
ஏனெனில் சட்டப்பூர்வமாக வழங்கக்கூடிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. மேலும், நான் புரிந்துகொண்ட வரையில், அமெரிக்க விசாரணையால், இந்தியா-அமெரிக்க உறவுகளில் எந்த சிக்கலும் இல்லை. உறவு மிகவும் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. எனவே, இந்தியாவிற்குள்ளேயே சிறந்த தகவல்கள் பகிரப்படும் என்று கருதுகிறேன்.
அதேசமயம், கனடா விவகாரத்தில் உரையாடல்கள் மட்டுமே நடந்தன. நாங்கள் செய்ய விரும்பிய விசாரணையை மேற்கொள்ள எங்களுக்கு பொருத்தமான தகவல்கள் தேவைப்பட்டன. அத்தகவல்கள் இல்லாத காலம் வரை, சட்டத்தின் ஆட்சி உள்ள நாட்டில், விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரை சுட்டுக் கொன்றதில் எங்கள் அரசாங்கத்தின் தொடர்பு இல்லை என்பதை இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உங்களுக்கும் உங்கள் பார்வையாளர்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.