உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்க வாய்ப்பு உள்ளதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்குத்து மற்றும் பக்கவாட்டு துளையிடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்புப்பணியின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மீட்புப்பணியில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நமது இலக்கு 57 மீட்டர். தற்பேது வரை 52 மீட்டரை அடைந்துள்ளோம்.
குழாய் சென்றவுடன், தொழிலாளர்களை வெளியே கொண்டு வரும் பணி தொடங்கும் என்றும், அனைவரும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், இன்று நான் பாசிட்டிவாக இருக்கிறேன். மலையின் உச்சியில் துளையிடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
41 தொழிலாளர்களும் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.