சென்னை ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை விவகாரத்தில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் என்ற மாணவர், தனது நண்பர்களுடன் வேளச்சேரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 31 -ம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற சச்சின் குமார் ஜெயின், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வீட்டிற்குச் சென்று, அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மாணவர் தற்கொலை குறித்து, முன்னாள் போலீஸ் டிஜிபி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை சென்னை ஐஐடி அமைத்திருந்தது.
இதில், சென்னை ஐஐடியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் ஆசிஷ்குமார் சென்னின் துன்புறுத்தல் காரணமாகச் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்தக் குழு பரிந்துரை செய்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.