மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 -ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம், தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், நிலம் ஒதுக்கீட்டில் கால தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடன் வழங்க முன்வந்தது. அதற்கான நடைமுறைகள், ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே, எய்ம்ஸ் கட்டிடப் பணிகளுக்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, 2 கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்றும், எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாகக் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.