சபரிமலையில் படி பூஜை செய்வதற்கு 2039-ஆம் ஆண்டு வரையிலும், உதயாஸ்தமன பூஜை செய்வதற்கு 2029-ஆம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை உள்ளிட்ட பூஜைகளில் பங்கேற்பதற்காக முன்பதிவுகள் குறித்த தகவல்களைக் கோவில் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் பக்தி பூர்வமானதும் படி பூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து, தேங்காய் குத்துவிளக்கு வைத்து மலர்களால் அலங்கரித்து தந்திரி தலைமையில் ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். சபரிமலை உள்ளிட்ட 18 மலைகளின், மலை தேவதைகளைத் திருப்திப்படுத்த இந்த பூஜை செய்யப்படுகிறது.
இந்த பூஜைக்குக் கட்டணம் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். 2039-ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது.
ஐயப்பன் கோவில் நடைதிறந்தது முதல் காலை, மாலை தொடர்ச்சியாக நடைபெறும் உதயாஸ்தமன பூஜையின் கட்டணம் ரூ. 61 ஆயிரம் 800 ஆகும். இது 2029-ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது.
சகஸ்ர கலச பூஜையின் கட்டணம் ரூ. 91 ஆயிரத்து 250 ஆகும். இது 2030-ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது.
சபரிமலை கோவிலின் நிர்வாக அலுவலகத்தில் இதற்கான கட்டணம் செலுத்தி பூஜைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது முன்பதிவு செய்பவர்கள், பூஜை செய்யும் காலத்தில் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தால், கூடுதல் தொகையை மீண்டும் செலுத்த வேண்டும்.
படிபூஜை நேரத்தில் பக்தர்கள் படி ஏறுவதைத் தடை செய்ய வேண்டும் என்பதால், மண்டலக் காலத்தில் இந்த பூஜை கிடையாது. மகர விளக்கு முடிந்த பின், மாத பூஜை காலங்களில் படி பூஜை நடைபெறும்.