ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னும் இந்திய அணியை விடாமல் சீண்டி வருகிறார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அப்போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் பேசி வருகிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடந்த 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிப் போட்டியை காண சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ரசிகர்கள் நேரில் வருவார்கள்.
ஆஸ்திரேலிய அணி அவர்களை இந்திய அணிக்கு கோஷமிட முடியாதபடி நிசப்தம் ஆக்கிக் காட்டும். ஒரு லட்சம் மக்கள் நிசப்தமாக ஆக்குவதே எங்களின் இலக்கு என கூறி இருந்தார்.
அவர் சொன்னதைப் போல இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. ஒரு கட்டத்தில் ராகுலுடன் கூட்டணி அமைத்து அரைசதம் அடித்து இருந்த விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.
அப்போது மைதானம் அமைதி ஆனது. பாட் கம்மின்ஸ் சொன்னதைப் போல ஒரு லட்சம் ரசிகர்களை மயான அமைதியுடன் இருக்கச் செய்தார். உண்மையில் அது ஆஸ்திரேலிய அணியின் திறமை மற்றும் பெரிய சாதனை தான்.
ஆனால், அதை உலகக்கோப்பை முடிந்த உடனும் சொல்லிக் காட்டி, அதிலும் உலகக்கோப்பை வென்ற தருணத்தை விட அந்த ரசிகர்களை அமைதி ஆக்கியதே பெரிய தருணம் என கூறுவதெல்லாம் இந்தியாவை சீண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்வது தான்.
அப்படி என்ன சொல்லி இருக்கிறார் என்றால், சாகும் தருவாயில் கூட விராட் கோலி விக்கெட்டுக்கு பின் ஒரு லட்சம் ரசிகர்கள் அமைதியாக இருந்த தருணத்தை நினைத்துப் பார்ப்பேன் என கூறி இருக்கிறார்.
அந்த பேட்டியில் 70 வயதில் உங்கள் மரணப் படுக்கையில் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றி குறித்து ஒரு தருணத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றால் எதை நினைத்துப் பார்ப்பீர்கள்? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு பாட் கம்மின்ஸ் அளித்த பதில், “விராட் கோலியின் விக்கெட். அப்போது நான் உற்சாகத்தில் இருந்தேன். நாங்கள் விக்கெட் வீழ்த்திய பின் ஒன்று கூடினோம்.
அப்போது ஸ்டீவ் ஸ்மித், “ஒரு வினாடி ரசிகர்களை கவனியுங்கள்” என்றார். நாங்கள் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்து ரசிகர்களை கவனித்தோம்.
ஒரு நூலகத்தில் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படி இருந்தது அந்த மைதானம். 1 லட்சம் இந்தியர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால், அமைதியாக இருந்தது. அந்த தருணத்தை நீண்ட காலம் நான் நினைத்துக் கொண்டே இருப்பேன்” என்றார் கம்மின்ஸ்.
இந்த செயல் சோகத்தில் இருந்த ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.