தீவிரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், பாலஸ்தீன பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நடைபெற்ற விவாதத்தில் காம்போஜ் உரையாற்றினார். அப்போது பேசியவர், பாலஸ்தீன மக்களுடனான இந்தியாவின் நீண்டகால உறவையும், பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் தீர்வுக்கான ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார், தீவிரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
காசாவில் பணயக்கைதிகள் குறித்து மேலும் கவலை தெரிவித்த கம்போஜ், மீதமுள்ள பணயக்கைதிகளை உடனடியாகவும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பல்வேறு உலகத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேல்- காசா இடையே மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், உரிய நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய இந்தப் போர் நிறுத்தம் உதவும் என்றும், இந்தியா இதுவரை 70 டன் அளவிலான மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண உதவிகளை பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.