கோவை வால்பாறையில் காலனி குடியிருப்புப் பகுதியில் மூன்று சிறுத்தைகள் சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, கரடி, யானை, காட்டெருமை எனப் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், இங்குள்ள சிறுத்தைகளுக்கு வனத்தில் போதிய உணவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சிறுத்தைகள் உணவு தேடி, வால்பாறை உள்ளிட்ட நகர் பகுதியில் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
அவ்வாறு ஊருக்குள் வரும் சிறுத்தைகள், கண்ணில்படும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை என அனைத்தையும் வேட்டையாடி வருகிறது. எதிரில் மனிதர்கள் வந்தால் அவர்களையும் தாக்குகிறது.
இரவு நேரம் வந்துவிட்டாலே வால்பாறை பகுதியில் எந்த சிறுத்தை எங்கிருந்து வருமோ என பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், கோவை வால்பாறை காலனி குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் 3 சிறுத்தைகள் சுற்றித்திரிந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் அச்சமாக உள்ளதாகக் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, உணவு தேடி ஊருக்குள் வரும் சிறுத்தைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிடவேண்டும் என்றும், வனத்துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.