சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, போரூர், தி.நகர், எழும்பூர், வேப்பேரி, மயிலாப்பூர், இராயப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.