தென் தமிழகத்தில் கலவர சூழல் உள்ளதால், பாதுகாப்பு கருதி துணை இராணுவப்படையை மத்திய அரசு அனுப்ப வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
தமிழகத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 1995 – ம் ஆண்டில் நடந்ததைப் போன்ற கலவரச் சூழல், தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும், தென் மாவட்டங்களில் 50 -க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளன. இதில்அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
தனது சொந்த நிலத்தில் உழைத்துப் பிழைப்பதற்கு வழியின்றி அஞ்சி வாழ வேண்டி உள்ளது அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உள்ளது. காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 90 சதவீதம் உள்ளதே இதற்குக் காரணம்.
தென் மாவட்டங்களில் கலவரம் வெடித்தால் அதை வைத்து அரசியல் அதாயம் அடையலாம் என தி.மு.க அரசு நினைக்கிறது. தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி ரீதியான தாக்குதல், ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை முறையாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்புக் குழுவை அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும், தென் மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், துணை ராணுவப் படையை அங்கு நிறுத்தி வைக்க வேண்டும். சமூக விரோதிகளுக்குத் துணையாக உள்ள காவல்துறையினரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.