தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், ஆறு, குளம், ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில், பரமக்குடி அருகே வலசை பகுதியில் உள்ள கால்வாயில் நீர் கரைஓட்டியபடி செல்கிறது.
கால்வாயை கடக்கப் பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் மரத்தின் மீது கயிறு கட்டி, கால்வாயை கடந்து செல்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் கரையைக் கடந்து வருகின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பலரும் ஆபத்தை உணராமல் இவ்வாறு செயல்படுவதால், உயிருக்கே ஆபத்தாக முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரிய அளவில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே, அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.