கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா தேயிலை எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.
வால்பாறையில் குறிப்பாக, சிறுகுன்றா, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், புதுத்தோட்டம், பச்சமலை, தாய்முடி, வறட்டுப்பாறை, சங்கிலிரோடு, ஊசிமலை மட்டம் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.
பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில், யானைகள் உலா வருவதால், தேயிலைத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் உலா வரும் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்கின்றன. மேலும், அப்பகுதியில் பொருட்களைச் சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.
இந்த நிலையில், சிறுகுன்றாவில் உள்ள, 12-ஆம் நம்பர் தேயிலை காட்டில், நேற்று அதிகாலை முதல் யானைகள் கூட்டமாக முகாமிட்டது.
இதனால், தொழிலாளர்கள் தேயிலைப் பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.