விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தியது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்த 38 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று மட்டும் மொத்தமாக 18 போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியாக தமிழகம் மற்றும் பரோடா அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் தமிழக அணி பேட்டிங் செய்தது.
தமிழக அணியின் தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் ஓவர் முடிவிலேயே ஜெகதீசன் டக் அவுட் ஆகினார்.
பின்னர் களமிறங்கிய சாய் கிஷோர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து விளையாடி வந்த சாய் சுதர்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்படி தமிழக அணியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்துக் கொண்டே இருக்க அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கினார் தினேஷ் கார்த்தி அவருடன் ஷாருகான் களமிறங்கினார்.
இவர்கள் இருவரின் இணை அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது. இதில் தினேஷ் கார்த்தி 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் விளையாடி வந்த ஷாருகான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 33.3 வது ஓவரிலேயே தமிழக அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பரோடா அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்தது.
இந்த அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக விஷ்ணு சோலங்கி 25 ரன்களும் பார்கவ் பட் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் பரோடா அணி 23.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 124 ரன்களில் ஆட்டமிழந்தது.
தமிழக அணியின் அதிகபட்சமாக நடராஜன் 7 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதேபோல் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்களும், சாய் கிஷோர் 2 விக்கெட்களும், சந்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் தமிழக அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.