இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்ததையடுத்து தற்போது இலங்கை கிரிக்கெட் அணி வழக்கம்போல் இருதரப்பு தொடர்களில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது.
இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வழக்கம்போல் இருதரப்பு தொடர்களில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
இதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டு விளையாட போகும் தொடர் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி இலங்கை அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வே உடன் 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜனவரி மாதம் விளையாட உள்ளது.
அதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் கொண்ட தொடரில் இலங்கை விளையாட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வங்கதேசத்துக்கு சென்று ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
ஜூலை மாதம் தங்களது சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் இலங்கை விளையாடவுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து உடன் இலங்கை விளையாட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் தலைமை செயல் அதிகாரி ஆஸ்லி டி சில்வா அடுத்த ஆண்டு பல விறுவிறுப்பான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாட உள்ளது.
இதன் மூலம் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகளும் பொழுதுபோக்கும் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக கூறியுள்ளார்.
மேலும் இலங்கை அணி அடுத்த ஆண்டு மட்டும் 52 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.