தமிழக அரசே, தலைநகரம் தத்தளிக்கிறது, இனியும் தற்பெருமை பேசாமல் துரித நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள X பதிவில்,
கடந்த ஓரிரு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகரம் தண்ணீரில் மிதக்கிறது. வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததுள்ளது.
மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பகுதியில் ஒரு உயிர் பலியாகியுள்ளது. 20 செ.மீ மழை பெய்தாலும் மழை நீர் தேங்காது என சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ள நிலையில் தற்போது சென்னையில் பரவலாக 10 செ.மீ மழையும் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 20 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. அதற்கே சென்னை முழுவதும் தத்தளிக்கிறது.
மழை நீர் வடிகால்கள் அமைக்க ரூபாய் 4000 கோடி பேக்கேஜ் என கூறி தற்பெருமை பேசிய திமுக அரசு இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது. இனியும் தற்பெருமை பேசாமல் மழை நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.