தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்குச் சொந்தமாக ஹோட்டல்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை, மலை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களில் அமைந்துள்ளது.
இந்த ஹோட்டல்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தங்குவதற்குத் தகுந்த வகையில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மதுரையில் தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக தமிழ்நாடு ஹோட்டலில், 400 பேர் அமரக்கூடிய திருமண அரங்கம், தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சி, கருத்தரங்குகள், சமூக நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பிரம்மாண்ட அரங்கம், நட்சத்திர விடுதி போல அமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்துடன் இலவச காலை உணவுடன் கூடிய குளிர்சாதன வசதியுள்ள அறைகள், விசாலமான கார் பார்க்கிங், விளையாட்டு மைதானம் மற்றும் அதி நவீன மின் உலர் சலவையகம் வசதிகள் எல்லாம் உள்ளன. மதுரை உள்ளிட்ட நகரங்களில், புதிதாக டிரைவ் இன் ரெஸ்டாரண்ட்-ம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் இனி, எமரால்ட் ஹோட்டல் என்ற பெயரில் செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முயற்சி, தமிழ்நாடு ஹோட்டலை தனியார் மயம் ஆக்கும் முயற்சிக்கான முன்னோட்டமே என அரசியல் கட்சி தலைவர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.
மேலும், கேரளா அரசு, அம்மாநிலத்தில் கேரளா கிளப் என்ற பெயரில், எல்லா இடத்திலும் ஹோட்டல் வைத்துள்ளது. அதுபோல, தமிழகத்தில் வைக்கலாம் அல்லது பெயர் மாற்றம் என்ற பெயரில் தனியார் மயமாக்கினால் போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் முக்கிய அரசியல் கட்சிகள்.