தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றது. பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3 -ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவையின் காலம் முடிவடைந்ததை அடுத்து அந்த மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுதும் 3.26 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில், 5.33 லட்சம் பேர் முதன் முறை வாக்காளர்கள் ஆவர்.
மாநிலம் முழுதும் மொத்தம் 35,565 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தெலங்கானாவில் சட்டப்பேரவை வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதில், நக்சல் பாதிக்கப்பட்ட 13 தொகுதிகளில் மட்டும் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப் பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தற்போது, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தெலங்கானாவில், பா.ஜ.க., பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.